தேவாரம் சாக்கலூத்து மெட்டு மலையடிவாரப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற மூதாட்டி, ஒற்றைக் காட்டுயானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான தேவாரம் கோம்பை பண்ணைப்புரம் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர்.
மலையடிவாரப் பகுதிகளான மீனாட்சிபுரம், எள் கரடுப்பாறை, சாக்குலுத்து உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளது. இப்பகுதியில் இதுவரை ஒற்றை காட்டு யானை தாக்கி, ஏறத்தாழ பத்து பேர் இறந்துள்ளனர். ஒற்றை காட்டு யானையை பிடிக்க, கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை.
இந்நிலையில், மூனாண்டிபட்டி பகுதியை சார்ந்த மயில்தாய் (61) என்ற மூதாட்டி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான எள் கரடுப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது அண்ணன் மற்றும் உறவினர்கள், அவரை தேடிச் சென்றனர்.
வழியில், பலத்த காயங்களுடன் மயில்தாய் இறந்து கிடந்தார். அந்த பாதையில் யானை வந்து சென்றதற்கான தடங்கள் இருந்தன. இது குறித்து தேவாரம் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவரது சடலம், தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.