நவ.16ல் பள்ளிகள் திறப்பு இல்லை… அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!

தமிழகத்தில், நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது; இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை என்ற உத்தரவால், குழந்தைகள் நிம்மதியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், மழைக்காலம் என்பதால் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக, பெற்றோர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது.

பள்ளி திறப்பு தேதியை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு எதிர்க்கட்சிகளும் கோரிக்கை வைத்தன. இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமையில் கடந்த நவம்பர் 9ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு இன்று காலை அறிவிப்பு வெளியிட்டது.

பெற்றோர்கள் இருவேறு கருத்துகளை தெரிவித்த நிலயில், பள்ளிக்கல்வித்துறை ஆராய்ந்து 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் மற்றும் பள்ளி விடுதிகள் 16ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட உத்தரவு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ரத்து செய்யப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பள்ளிகள் திறப்பு தேதி சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்.

அதேபோல் கல்லூரிகளை நவம்பர் 16ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படி அனைத்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுநிலை இறுதியாண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி/பல்கலைக்கழகங்களை டிசம்பர் 2ஆம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்படுகிறது. இதர வகுப்பு மாணவர்களுக்குக் கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!