மத்திய அரசை கண்டித்து இந்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ள பொதுவேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவை தெரிவித்துள்ளது.
மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்களை எதிர்த்து இந்தியத் தொழிற்சங்க மையங்களின் சார்பில், வரும் 26.11.2020 அன்று மாபெரும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, திமுக தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக இருந்த 44 சட்டங்களில் 15 ஐ மத்திய அரசு ரத்து செய்துவிட்டது.
நடைமுறையில் உள்ள 29 சட்டங்களையும் நான்கு தொகுப்புகளாக்கி உள்ளதால் தொழிலாளர் உரிமை, நலன், பாதுகாப்பு அம்சங்கள் பறிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக போராடிப் பெற்ற தொழிலாளர்கள் உரிமையை உறுதி செய்யும் சட்டங்களை ரத்து செய்யும் முன் நாடாளுமன்றத்தில் ஆக்க பூர்வமாக விவாதிக்கப்படவில்லை.
எனவே, இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிக்கும் திமுகவின் சார்பில் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், இதை ஏதோ தொழிற்சங்கங்கள் மட்டும் எதிர்க்க வேண்டிய சட்டங்கள் என்று கருதிவிடாமல், தொழிலாளர் நலனில் ஆர்வமும் அக்கறையும் உள்ள அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் ஒரே அணியில் நின்று ஒரு முகமாகப் போராடிட முன்வர வேண்டும் என்றும், 26-ம் தேதி நடைபெறும் மாபெரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும்.
வீழ்வது மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோதப் போக்காக இருக்கட்டும்; வெல்வது தொழிலாளர்களின் ஒற்றுமையாக இருக்கட்டும்! என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.