நாக் ஏவுகணை சோதனை… வெற்றிகரமாக நடத்தியது இந்தியா!

சீனாவுடன் போர் பதற்றம் தொடரும் நிலையில், கவச வாகனங்களை தாக்கக்கூடிய நாக் ஏவுகணையை, இன்று இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்துள்ளது.

அண்டை நாடான சீனாவுடன் இந்தியாவுக்கு எல்லை பிரச்சனை நிலவுகிறது. கடந்த சில மாதங்களாக எல்லையில் இரு நாட்டு ராணுவங்களும் நிறுத்தப்பட்டு, போர்ப்பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் இந்தியா கடந்த சில வாரங்களாக ஏவுகணை பரிசோதனைகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.

இந்நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ள, பீரங்கி மற்றும் கவச வாகனங்களை தாக்கும் திறனுள்ள நாக் ஏவுகணையின் இறுதி பரிசோதனையை, இந்தியா இன்று வெற்றிகரமாக நடத்தி முடித்தது. ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில், இன்று காலை 6:45 மணியளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக, டி.ஆர்.டி.ஓ. வட்டாரங்கள் தெரிவித்தன.

உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ள நாக் ஏவுகணை, நிலத்திலிருந்தும், வான் பரப்பிலிருந்தும் ஏவலாம். இலக்குகளை 4 முதல் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று தாக்க முடியும். இது, மூன்றாம் தலைமுறை பீரங்கி வாகன எதிர்ப்பு ஏவுகணை ஆகும், இது பகல் மற்றும் இரவு என அனைத்து நேரங்களிலும், எதிரியின் டாங்குகள் மீது தாக்குதல் நடத்த முடியும்.

இந்திய ராணுவத்திற்கு 300 நாக் ஏவுகணைகள் மற்றும் 25 ஏவுகணை கேரியர்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் 2018 ல் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!