நியூசிலாந்து வரலாற்றில் முதன் முறையாக இந்தியாவைச் சேர்ந்த பெண் பிரியங்கா ராதாகிருஷ்ணன், அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்தில் பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன் தலைமையில் தொழிலாளர் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் ஜெசிந்தா தனது அமைச்சரவை மாற்றி அமைத்துள்ளார். இதில், புதிதாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள 5 பேரில், முதன்முறையாக இந்தியர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.
இந்திய வம்சாவளி பெண் பிரியங்கா ராதாகிருஷ்ணன், 41, நியூசிலாந்தின் சமூக நலம், இளைஞர் நலம் மற்றும் தன்னார்வ துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரியங்கா கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் சென்னையில்தான் பிறந்தவர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த ராமன் ராதாகிருஷ்ணன் – உஷா தம்பதியினருக்கு, 1979ஆம் ஆண்டில் பிறந்தவர் தான் பிரியங்கா. சிங்கப்பூரில் வளர்ந்து, பின்னர் பின்னர் நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்தார்.
கடந்த 2006ம் ஆண்டில் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியில் சேர்ந்து, தீவிர அரசியலில் ஈடுபட்டார். 2014 தேர்தலில் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.