பல மாவட்டங்களை குளிர்வித்த மழை! அடுத்த சில நாட்களுக்கு தொடர வாய்ப்பு

தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்து குளிர்வித்தது. அடுத்த 48 மணி நேரத்தில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கனமழை; திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கடலூர், அரியலூர் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். எனவே, வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 21, 22 தெற்கு மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள், சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று கூறியுள்ளது.

இதற்கிடையே சென்னை நகரின் பல பகுதிகளில் இன்று மழை பெயதது. திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், கிண்டி, ஈக்காட்டுதாங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதேபோல் சேலம், கோவை உள்ளிட்ட பல இடங்களிலும் மழை பெய்துள்ளது.

Translate »
error: Content is protected !!