சென்னை மவுண்ட் காவல் மாவட்டத்தில் நன்னடத்தை உறுதி ஆவணத்தை மீறிய ரவுடிக்கு 273 நாட்கள் சிறை தண்டனை விதித்து செயல் நடுவரும் துணைக்கமிஷனருமான பிரபாகரன் உத்தரவிட்டார்.
சென்னை, காமராஜபுரம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் அஜித் (வயது 21). இவர் மீது அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அஜித் கடந்த 23.07.2020 அன்று மவுண்ட் துணைக்கமிஷனர் பிரபாகரன் முன்பு முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால் கடந்த மாதம் 11ம் தேதியன்று சேலையூர் காவல் நிலைய எல்லையில் அடிதடி சம்பவத்தில் ஈடுபட்டு கைதானார். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைத்தனர். திருந்தி வாழ்வதாக பிணை ஆவணத்தில் உறுதியளித்த அஜித் அதனை மீறியதால் அவர் மீது குற்றத் தடுப்பு நடவடிக்கையில் போலீசார் இறங்கினர்.
நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 107ன் கீழ் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து மீதமுள்ள 273 நாட்கள், பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதித்து துணைக்கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றவாளி அஜித் பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.