பீகாரில் சூழ்ச்சியால் நிதீஷ் கூட்டணி வெற்றி… ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் புகார்!

பீகார் சட்டசபை தேர்தலில், சூழ்ச்சியால்தான் பாஜக – ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி வெற்றி பெற்றது என்று, ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். 

பீகார் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 243 இடங்களில் 125 இடங்களை கைப்பற்றி, நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு, பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகளின் மகா கூட்டணி, 110 இடங்களை வென்றது. மாநிலத்தில் 75 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உருவெடுத்தாலும், அதனால் ஆட்சி அமைக்க இயலாத சூழல் உள்ளது. 

இச்சூழலில், தேர்தல் முடிவுகள் குறித்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மக்கள் மாற்றத்துக்காகவே தீர்ப்பளித்தனர். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது பணம், அதிகார பலம், சூழ்ச்சி செய்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. எங்கள் கட்சியைவிட, அதாவது மகா கூட்டணியைவிட, தேசிய ஜனநாயகக் கூட்டணி 12,270 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது.

இத்தேர்தலில் நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 3வது இடத்தைத்தான் பிடித்துள்ளது.  நிதிஷ் குமார் மனசாட்சிப்படி நடப்பவராக இருந்தால், அவர் முதல்வர்பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும். மக்களின் தீர்ப்பை அவர் மதிக்க வேண்டும்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில், அரசியலில் இருந்து ஓய்வுபெறப்போவதாகக் கூறி அனுதாபம் தேடி, வாக்குகளைக்கவர மக்களிடம் நிதிஷ் குமார் பேசினார். அரசியல் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருக்கும்போது இப்படி தரக்குறைவான செயல்களில் அவர் ஈடுபடக்கூடாது.

எங்கள் கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதி குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவோம். பல தொகுதிகளில் தபால் வாக்குகள் கடைசிக் கட்டத்தில்தான் எண்ணப்பட்டன என்று தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டார்.

Translate »
error: Content is protected !!