பீகார் சட்டசபைத் தேர்தலில், ஐக்கிய ஜனதாதளம் + பாஜக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது; கருத்து கணிப்புகளுக்கு மாறாக, தேஜஸ்வி யாதவின் கூட்டணி 100-க்கும் அதிகமான இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றிருக்கிறது.
பீகாரில், ஐக்கிய ஜனதாதளம் தலைவர் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சட்டசபை பதவிக்காலம் நிறைவு பெறுவதை ஒட்டி, மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கும், அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும், இன்று காலை தொடங்கியது. மொத்தம் 38 மாவட்டங்களில் உள்ள 55 மையங்களில், வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆட்சி அமைக்க, 122 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
கடைசியாக கிடைத்த தகவலின்படி ஐக்கிய ஜனதாதளம் – பாஜக கூட்டணி 130 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை நெருங்கியுள்ளது. அதே நேரம், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி. – காங்கிரஸ் கூட்டணி, 101 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காலஞ்சென்ற ராம்விலாஸ் பாஸ்வானின் லோக்ஜனசக்தி 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பீகார் தேர்தலில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் 40 இடங்களில் 500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளன; அதேபோல் 70 இடங்களில் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் இரு தரப்பிற்கும் இடையே முன்னிலை வித்தியாசம் உள்ளது.
இம்முறை பீகார் தேர்தலில், பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வருகிறது. இதுவரை வெளியான எண்ணிக்கையின்படி, பாஜக 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 48 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
எதிர்க்கட்சியின் மெகா கூட்டணியில் ராஷ்டீரிய ஜனதா தளம் 60, காங்கிரஸ் 21 இடங்களில் முன்னிலையில் உள்ளது. எனவே, முதல்வர் பதவிக்கு பாஜக கூட்டணி உரிமை கோரும் என்று தெரிகிறது.