மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை

அரசியல் கட்சி சர்ச்சைகளுக்கு மத்தியில் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.
தமிழ் திரைப்பட உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். அவரது தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர், “விஜய்அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்” என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கடந்த வாரம் அரசியல் கட்சியை பதிவு செய்தார்.

இதன் தலைவராக திருச்சி ஆர்.கே.ராஜா என்கிற பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சி பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, தமிழக திரையுலக வட்டாரத்திலும், அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே நேரம், அரசியல் கட்சிக்கு விஜய் சார்பில் மறுப்பும் எதிர்ப்பும் தெரிக்கப்பட்டது. மேலும், அந்த கட்சியுடன் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் விஜய் அறிவுறுத்தி இருந்தார்.

ஆனால், எஸ்.ஏ.சந்திரசேகரோ, மக்களுக்கு நல்லது செய்யவே விஜய் பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளேன். விஜயை சுற்றி கிரிமினல்கள் உள்ளனர். அவர், விஷ வலையில் சிக்கியுள்ளார் என்று கூறினார்.

இந்நிலையில், நடிகர் விஜய் தனது சென்னை பனையூர் இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

தந்தை தொடங்கிய அரசியல் கட்சி விவகாரம், தற்போது அரசியல் சூழல், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நடிகர் விஜய் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு ஆதரவான நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Translate »
error: Content is protected !!