தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் பழனிசாமி, புதுக்கோட்டையில் தெரிவித்தார். மாட்டு வண்டியை ஓட்டிச் சென்று விவசாயிகளின் வரவேற்பை அவர் ஏற்றுக் கொண்டார்.
வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் பழனிச்சாமி, இன்று புதுக்கோட்டைக்கு சென்றார். ஜல்லிக்கட்டில் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டதன் நினைவாக, சீறிச்செல்லும் ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்று நிறுவப்பட்டுள்ள வெண்கல சிலையை, விராலிமலையில் அவர் திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து, காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் மிக முக்கிய அங்கமான 1,088 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய குளமான கவிநாடு கண்மாயை அவர் பார்வையிட்டார். காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் 200 மாட்டு வண்டிகளுடன் முதலமைச்சர் பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர்.
அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் கவிநாடு கண்மாயில், அவர்களின் விருப்பப்படி மாட்டு வண்டியில் முதல்வர் பழனிச்சாமி அமர்ந்தார். பின்னர், மாட்டு வண்டியை ஓட்டி, விவசாயிகள் அளித்த வரவேற்பை அவர் ஏற்றுக் கொண்டார். இதை கண்டு அங்கிருந்த விவசாயிகள், பொதுமக்கள் உற்சாகமடைந்து ஆரவாரம் செய்தனர்.
தனது பயணத்தின் ஒருபகுதியாக, புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து முதல்வர் பழனிச்சாமி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
முதலீட்டாளர் மாநாட்டில் எந்த தொழிலும் தமிழகத்திற்கு வரவில்லை என ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐடிசி நிறுவன ஆலை தொடங்கப்பட்டு 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
புதுக்கோட்டையில் 197 கோடி ரூபாய் செலவில் தொழில் தொடங்க முதலீடு செய்துள்ளன. 211 தொழில் நிறுவனங்கள் சுமார் 300 கோடி செலவில் தொழில் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஐடிசி தொழிற்சாலை புதுக்கோட்டையில் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தீவிர கண்காணிப்பு, நடவடிக்கை மற்றும் சிகிச்சை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தவுடன், அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று, முதல்வர் பழனிச்சாமி கூறினார்.
—