சென்னையில் மாநகர பஸ் மோதி 6ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலியானான். அசுரவேகத்தில் பஸ்சை ஓட்டி வந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, எம்ஜிஆர் நகர், சூளைப்பள்ளம், காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். சென்னை கார்ப்பரேஷன் 138வது வட்ட தற்காலிக துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் மணிகண்டன் (வயது 11). சென்னை, சின்மயா நகரில் உள்ள கார்ப்பரேஷன் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் சிறுவன் மணிகண்டன், வீட்டு அருகில் உள்ள வெங்கட்ராமன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக தி.நகர் முதல் வளசரவாக்கம் வரை செல்லும் மினிபஸ் அசுர வேகத்தில் வந்தது. எதிர்பாராத விதமாக மினிபஸ் சிறுவன் மணிகண்டன் மீது மோதியது.
இதில் பேருந்தின் பின்பக்க டயரில் சிக்கி சிறுவன் பரிதாபமாக உடல் நசுங்கி இறந்தான். இந்த விபத்து தொடர்பாக தகவல் கிடைத்ததும் எம்ஜிஆர் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் கிண்டி போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அசுர வேகத்தில் பஸ்சை ஓட்டியதாக பஸ் டிரைவர் திருத்தணியைச் சேர்ந்த சிவா (45) என்பவரை கைது செய்தனர். அவர் மீது 279 (அதிவேகமாக பஸ்சை ஓட்டுதல்), 304 (ஏ) (விபத்து மூலம் உயிரிழப்பு ஏற்படுத்துதல்) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.