மீமிசல் கடலில் மிதந்து வந்த 49 கிலோ கஞ்சா

BY RAJA MUHAMMED, UPDATED:  tuesday, november, 3, 2020, 11.00 PM

புதுக்கோட்டை, மாவட்டம் மீமிசல் கடல் பகுதியில் நடுக்கடலில் மிதந்து வந்த 49 கிலோ கஞ்சாவை மீட்டு மீனவர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடல் பகுதியில் அதிகாலையில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிப்பது வழக்கம். அதன்படி மீமிசல், புதுக்குடி, தெற்கு மீனவ கிராமத்தில் இருந்து நேற்று அதிகாலை 4 மணியளவில் அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பாலகுமார், ஜனார்த்தனன், ராமமூர்த்தி, கரண் ஆகிய 4 பேரும் பைபர் போட்டில் மீன் பிடிக்க சென்றனர். காலை சுமார் 8.45 மணியளவில் நடுக்கடலில் மூட்டை ஒன்று மிதந்து வந்தது. அந்த மூட்டையை மீனவர்கள் தங்களது படகில் எடுத்துப் போட்டனர். மீன்பிடித்து முடித்து கரை திரும்பிய மீனவர்கள் அந்த மூட்டையைப் பிரித்து பார்த்தனர்.

அது மர்மப் பொருளாக இருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் மூட்டையை மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் முத்துக்கண்ணு வசம் ஒப்படைத்தனர். அவர் அந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது 14 பண்டல்களில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. ஒவ்வொரு பண்டல்களிலும் தலா மூன்றரை கிலோ வீதம் மொத்தம் 49 கிலோ கஞ்சா இருந்தது. அதனை சிவகங்கை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு வசம் இன்ஸ்பெக்டர் முத்தக்கண்ணு ஒப்படைத்தார். போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமலதா அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். இலங்கையில் இருந்து கடல் வழியாக கள்ளத்தோணியில் அந்த கஞ்சா கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கடலோர காவல் படைக்கு பயந்து அதனை கடத்தல் ஆசாமிகள் நடுக்கடலில் வீசி விட்டு தப்பியோடியிருக்கக்கூடும் என போலீசார் கருதுகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!