போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு தொடர்பாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்எல்ஏவும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி, 2011 முதல் 2015ம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி செந்தில்பாலாஜி 81 பேரிடம் சுமார் ரூ.1.62 கோடி மோசடியில் ஈடுபட்டதாக அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார், சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் கணேசன், இந்த முறைகேடு தொடர்பாக சோதனை நடைபெற்றது.
அத்துடன், புகாரில் முகாந்திரம் இருப்பதாக தெரியவந்ததையடுத்து கணேசனை போலீசார் கைது செய்தனர். போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கில், கணேசனுக்கும் தொடர்பு இருப்பதால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் கூறின.