ரூ. 218 கோடி பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக தனியார் நிதி நிறுவன சேர்மன் உள்பட இருவரை தமிழக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுவது திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிதிநிறுவனம். இந்தியா முழுவதும் இதன் கிளைகள் இயங்கி வருகிறது. தங்கள் நிறுவனத்தில் பண முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் முதலீடாக பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக சென்னை பொருளாதாரக்குற்றப்பிரிவில் ஏமாந்தவர்கள் புகார் அளித்தனர். அது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திவான் நிதி நிறுவனம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சுமார் ரூ. 218 கோடி வரையில் மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்த மோசடி தொடர்பாக திவான் நிதி நிறுவனத்தின் சேர்மன் கபில் ராஜேஷ் வாதவன் மற்றும் அவரது சகோதரர் தீரஜ் ராஜேஷ் வாதவன் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். இருவரும் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் சென்னை, கிண்டியில் உள்ள பொருளாதாரக்குற்றப்பிரிவில் புகார் அளிக்கும்படி பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.