தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.14 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
பிரபல தொழிலதிபராக இருந்த விஜய் மல்லையா, நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பினார். அவரை இந்தியாவுக்கு அழைத்துவருவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஒருபுறம் நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது. மல்லையாவை இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவதில் சிக்கல் எழுந்த நிலையில், கடன் ஏய்ப்பு புகாருக்குள்ளான மல்லையா லண்டனில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே, விஜய் மல்லையாவுக்கு பல்வேறு நாடுகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை மேற்கொண்டது. அதன்படி, மல்லையாவுக்கு சொந்தமான பிரான்சில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.14 கோடி என்று, அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.