மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டரிலும் மற்றும் நடந்தும் பேரணியாக செல்ல முடிவு செய்தனர். இந்த பேரணி இன்று 2வது நாளாகவும் தொடர்ந்தது. பேரணியில் வன்முறை ஏற்படாமல் தடுக்கவும், பொதுமக்களை பாதுகாக்கவும், அரியானா மற்றும் பஞ்சாப் இடையே அம்பாலா அருகே அமைந்த சம்பு எல்லை பகுதியில், விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
சாலையின் குறுக்கே தடுப்புகளும் அமிக்கப்பட்டு உள்ளன.டெல்லி காவல்துறையினர் விவசாயிகள் நகரத்திற்குள் நுழைவதைத் தடுக்க சிங்கு மற்றும் திக்ரி எல்லைப் பகுதிகளில் (டெல்லி-அரியானா எல்லை) முள்வேலி அமைத்து இருந்தனர்.பலத்த பாதுகாப்பு போடப்படு இருந்த போதிலும், பஞ்சாப் மற்றும் அரியானாவிலிருந்து ஆயிரகணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் திரண்டனர். இந்த நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்த பஞ்சாப் விவசாயிகள் அமைப்புகளுக்கு டெல்லிக்குள் நுழைய மத்திய அரசு அனுமதி அளித்ததாகக் கூறப்பட்டு உள்ளது.