விவசாயி நிலைமை இது தான்…! வட்டி கட்ட பணமில்லை… விவசாயியின் வீடுபுகுந்து தாக்கிய ஆக்சிஸ் வங்கி குண்டர்கள்..!

வட்டி கட்ட இயலாத விவசாயியை கரூர் ஆக்சிஸ் வங்கியின் குண்டர்கள் வீடுபுகுந்து தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், பனையம்பாளையத்தை சேர்ந்த ராமசாமி என்கிற விவசாயி கரூர் ஆக்சிஸ் வங்கியில் கடந்த 2014ஆம் ஆண்டு வேளாண் மேம்பாட்டு கடனாக ரூபாய் 19.5 லட்சம் பெற்றிருந்தார்.இந்த கடனுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை வட்டி செலுத்த வேண்டும்.

கடைசியாக ஆறு மாத வட்டி தொகை ரூ 2.30 லட்சம் மட்டுமே தற்போது நிலுவையில் உள்ளது. இதைக் கட்ட வற்புறுத்தி தொடர்ச்சியாக ராமசாமியையும் அவரது மகன் ராஜ்குமாரையும் ஆக்சிஸ் வங்கி தரப்பில் அலைபேசியில் அழைத்து முறைதவறி பேசியும், திட்டியும் வந்துள்ளனர்.

வட்டி தொகையை செலுத்துவதற்கு ராமசாமி, இரண்டு மாதம் அவகாசம் கேட்டபோது அதையும் கொடுக்காமல் இன்று காலை மேற்படி ராமசாமியின் வீட்டிற்கு வந்த வங்கியின் வசூல்பிரிவைச் சார்ந்த மதன் என்பவர், ராமசாமி, அவரது மகன் ராஜ்குமார் மற்றும் வீட்டில் உள்ள பெண்களை அவதூறாகப் பேசியதோடு, ராஜ்குமாரை தாக்கி காயப்படுத்தி, அவரது வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. விவசாயியை அவமதித்த ஆக்சிஸ் வங்கி நிர்வாகத்தை கண்டித்து கரூர் ஆக்சிஸ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் மேலாளரை கரூர் மாவட்ட காவல்துறை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காலத்தில் தாராபுரத்தைச் சேர்ந்த இராஜாமணி என்கிற விவசாயியை ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் கொடுமைப்படுத்தி அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!