தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் தற்காலிகமாகத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 மே மாதம் நடந்த போராட்டத்தில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது.
இதன் தொடர்ச்சியாக, 2018ம் ஆண்டு மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராக ஆலை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ் வழக்கில், ஆலையை மூடிய அரசின் உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது.
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இம்மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் அமர்வு முன்பு இன்று மீண்டும் காணொலி வாயிலாக விசாரணைக்கு வந்தது.
வேதாந்தா தரப்பில் வாதிடும் போது, இந்தியாவின் காப்பர் தேவையில் 36 சதவீதத்தை ஸ்டெர்லைட் ஆலை அளித்து வந்தது. ஆலை மூடப்பட்டதால் வெளிநாடுகளிலிருந்து காப்பரை இறக்குமதி செய்யும் நிலை உள்ளது. மேலும், ஆலையில் பணியாற்றிய 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மூன்று மாதத்துக்கு ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு தரப்பில், தாற்காலிகமாகச் செயல்பட அனுமதி கோருவது என்பது, , ஆலையை மறைமுகமாகத் திறக்கும் முயற்சி என்று வாதிடப்பட்டது. முடிவில், ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டுமென்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.