இஸ்ரேல் நாட்டின் அமைச்சரவை தினமும் 2,000 வெளிநாட்டு விமான பயணிகளை நாட்டிற்குள் நுழைய அனுமதி அளித்துள்ளது.
டெல்அவிவ்,
இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தாக்கம் பிற நாடுகளில் பரவத் தொடங்கியதால், அந்த நாடுகளில் இருந்து இஸ்ரேலில் வைரஸ் பரவுவதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கான அனுமதி பெருமளவு குறைக்கப்பட்டது. நாட்டின் பிரதான நுழைவு வாயிலாக கருதப்படும், பென் குரியான் விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான விமானங்கள் நிறுத்தப்பட்டன.
அதன்பின்னர் கொரோனா நிலவரம் மற்றும் போக்குவரத்து துறை மந்திரியின் புதிய திட்டங்களை பரிசீலனை செய்த அமைச்சரவை, விமான பயணிகள் தொடர்பான முக்கிய முடிவை எடுத்துள்ளது. தினமும் அதிகபட்சம் 2000 வெளிநாட்டு பயணிகள் வரை இஸ்ரேலுக்கு வருவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இத்தகவலை பிரதமர் அலுவலகமும், சுகாதாரத்துறையும் உறுதி செய்துள்ளது. அதேசமயம் இஸ்ரேலுக்கு வருகை தரும் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்கள் தனிமைப்படுத்தப்படும் ஹோட்டல்களை ஒப்பந்தம் செய்யும் பணி பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.