கர்நாடக பட்ஜெட் மார்ச் 8-ந் தேதி தாக்கல் செய்ய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு – மந்திரி பசவராஜ் பொம்மை

2021-22 ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை வருகிற மார்ச் மாதம் 8-ந் தேதி தாக்கல் செய்ய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டசபை விவகாரத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டசபை விவகாரத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் மாதம் 4-ந் தேதி தொடங்குகிறது. சபாநாயகர் காகேரி விடுத்த கோரிக்கையை ஏற்று 4 மற்றும் 5-ந் தேதிகளில் சட்டசபையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதம் நடைபெற உள்ளது.

அதைத் தொடர்ந்து 2021-22-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் 8-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. கர்நாடகத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 754 கொரோனா நோயாளிகளுக்கு அரசு சார்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக ரூ.620 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வருகிற மார்ச் மாதம் வரை கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக ரூ.80 கோடி தேவைப்படுகிறது. அதனால் அந்த ரூ.80 கோடி நிதியை ஒதுக்க மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் பிரதமர் கிராம சதக் திட்டத்தின் கீழ் ரூ.1,445 கோடி செலவில் 2,241 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள பெல்லந்தூர் ஏரியை மேம்படுத்த ரூ.169 கோடி நிதி ஒதுக்கப்படும். பெங்களூரு வசந்த்நகரில் அரசு அதிகாரிகளுக்காக குடியிருப்பு கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.117 கோடி ஒதுக்கப்படும்.

ரூ.1,348 கோடி செலவில் 8 வீட்டுவசதி திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழில் திட்டங்களுக்கு நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளது. இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பல்வேறு சமூகங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது கவனத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்து விரிவாக விவாதிக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து ஆய்வு செய்ய கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து மாநில அரசு இறுதி முடிவு எடுக்கும்.

Translate »
error: Content is protected !!