அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானம், நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத்,
குஜராத் மாநிலம் அகமதாபாத் மொட்டோராவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து சர்தார் வல்லபாய் படேல் மைதானம், நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதற்கு முன்னர் அகமதாபாத்தின் மோட்டேராவில் சர்தார் வல்லபாய் படேல் ஸ்போர்ட்ஸ் என்க்ளேவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி ‘பூமி பூஜை‘ செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்வ்ரத், விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
63 ஏக்கர்களில் பரந்து விரிந்துள்ள இந்த அரங்கத்தில், ஒரே நேரத்தில் 1 லட்சத்து10 ஆயிரம் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்கலாம். 800 கோடி ரூபாய் செலவில் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம், இந்த அரங்கத்தை கட்டி முடித்துள்ளது. இந்த மைதானத்தில் அதிநவீன வசதிகள் உள்ளன. பயிற்சிக்கென தனித்தனியே 2 மைதானங்கள் பெவிலியனுடன் அமைக்கப்பட்டுள்ளது.