சென்னை செம்மஞ்சேரியில் 375 கிலோ குட்கா பறிமுதல்: இருவர் கைது

சென்னை, நீலாங்கரையை அடுத்த செம்மஞ்சேரியில் தீக்குச்சி குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 375 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.

சென்னை, செம்மஞ்சேரி பகுதியில் பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனை ரகசியமாக நடைபெறுவதாக அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் தனிப்படைக்கு ரகசிய தகவல் வந்தது. அதனையடுத்து தனிப்படை எஸ்ஐ செல்வகுமார் தலைமையில் தலைமைக்காவலர்கள் வெங்கடேசன், சங்கர், முதல்நிலை காவலர்கள் சண்முகம், நாகராஜ், பூரண குமார் அடங்கிய தனிப்படை போலீசார் அது தொடர்பாக தீவிரமாக கண்காணித்தனர்.

அதனையடுத்து சென்னை செம்மஞ்சேரி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பாலாஜி ஸ்டோர்ஸ்சில் மளிகைக்கடை என்ற பெயரில் குட்கா விற்பனை செய்த சோகன்லால் (வயது 38) என்பவரை கைது செய்தனர். மேலும் அவருக்கு குட்காவை மொத்தமாக சப்ளை செய்த தாழம்பூரைச் சேர்ந்த ஜெயராஜ் (வயது 38) என்பவர் பிடிபட்டார். அவரது வீட்டுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தியதில் உள்ளே மூட்டை மூட்டைகளாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

ஜெயராஜ் சிறுசேரி, சோழிங்கநல்லுாரில் தீப்பெட்டி குடோன் வைத்துள்ளதாகவும் தீப்பெட்டி வியாபாரம் செய்வது போன்று குட்காவை அதில் பதுக்கி சென்னை நகரம் முழுவதும் உள்ள பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்து வந்ததாக தெரிவித்தார். அதனையடுத்து போலீசார் ஜெயராஜ் மற்றும் சோகன்லால் இருவரையும் கைது செய்தனர்.
ஜெயராஜ் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ், எம்டிஎம், ரெமோ, கூல்லிப், ஸ்வாகத் போன்ற வகையிலான சுமார் 10 லட்சம் மதிப்புள்ள 375 கிலோ எடையுள்ள குட்கா பாக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்குப் பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Translate »
error: Content is protected !!