கோவையில் அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காமல் பரிசு பொருட்களை தொடர்ந்து விநியோகம் செய்து வருவதாக, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் சிங்காநல்லூர் எம்.எல்.ஏவுமான நா.கார்த்திக், மாவட்ட ஆட்சியர் ராஜாமணியிடம், இன்று மனு அளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் கடந்த 26ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், அன்று முதல் விதிமுறைகளை கடைபிடிக்காமல் அதிமுகவினர் கோவையில் சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இதனிடையே நேற்று கூட, பீளமேடு பகுதியில் அதிமுகவினர் காரில் பரிசு பொருட்களை எடுத்து வந்தனர். இது தொடர்பாக தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மற்றும் காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதிமுகவினருக்கு துணை போகிறார்கள்.
இதுகுறித்து ஆட்சியர் மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலராக உள்ள ராஜாமணியிடம் மனு அளித்துள்ளோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இங்குள்ள சில காவலர்கள் அதிமுகவினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து விதிமுறைகள் மீறப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு எம் எல் ஏ நா கார்த்திக் கூறினார். வழக்கறிஞர்கள் தண்டபாணி, அருள் மொழி, கிருஷ்ணகுமார், ஜி.டி.ராஜேந்திரன்,மற்றும் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், மாடசாமி, முருகேசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.