பிரேக் பிடிக்காமல் திடீரென பின்னோக்கி சென்ற ரயில்… பதற்றத்தில் பயணிகள்..! வைரல் வீடியோ

டேராடூன்,

உத்தரகண்ட் மாநிலத்தில் பிரேக் பிடிக்காததால் சுமார் 20 கிலோமீட்டர் ரயில் பின்னோக்கி சென்ற வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் தனக்பூர் நோக்கி பூர்ணகிரி ஜனசதாப்தி ரயில் இயக்கப்படுவது வழக்கம்.

இந்த ரயில் நேற்று வழக்கம் போல இயக்கப்பட்டது, அப்போது காதிமாதனக்பூர் இடைய ரயில் சென்று கொண்டிருந்தது. அந்தப் பாதையில் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே பசு ஒன்று அடிப்பட்டு, உயிரிழந்தது. இதன் காரணமாக ரயிலை நிறுத்தப்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் ரயில் திடீரென்று பின்னோக்கி செல்ல தொடங்கியுள்ளது..

முதலில் ரயில் டிரைவர் தான் பின்னோக்கி இயக்குகிறார் என்று பயணிகள் நினைத்துள்ளனர். இருப்பினும், அந்தப் பகுதி முழுவதும் இறக்கமாக இருந்ததால் ரயில் வேகமாகப் பின்னோக்கி செல்ல தொடங்கியது. இதன் காரணமாக ரயில் உள்ளே இருந்த பயணிகள் பீதியடைந்தனர். அப்போது தண்டவாளம் அருகே இருந்தவர்கள், ரயில் பின்னோக்கி செல்வதை எடுத்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது…

இதைக் கட்டுப்படுத்த ரயில் டிரைவர் முயன்றுள்ளார். இருப்பினும், பிரேக் பெயிலியர் ஏற்பட்டதால் டிரைவரால் ரயிலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் உடனடியாக இது குறித்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.. இதையடுத்து அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டன. சுமார் 20 கிலோமீட்டருக்கு ரயில் இப்படியே பின்னோக்கி சென்றுள்ளது

அதேநேரம் ரயிலின் வேகம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் உள்ளிருந்த பயணிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும், ரயில் வேகமாகச் சென்றதால் தடம்புரண்டு விபத்து ஏற்படுமோ என்றும் அஞ்சப்பட்டது. தண்டவாளத்தில் மணலை கொட்டி, ஒரு வழியாக காதிமா பகுதிக்கு அருகே ரயில் நிறுத்தப்பட்டது. ரயில்வே அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

அதைத் தொடர்ந்து பயணிகள் பத்திரமாக ரயிலில் இருந்து இறக்கப்பட்டு, பஸ் மூலம் தனக்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உடனடியாக ரயிலில் பழுது சரி செய்யப்பட்டு, தனக்பூருக்கு சென்றது.. இது குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட கமிட்டியை அமைத்துள்ளதாகவும் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே செய்தித்தொடர்பாளர் ராஜேந்திர சிங் தெரிவித்தார்

Translate »
error: Content is protected !!