நடிகர் விஜய் சேதுபதியின் மகள் குறித்து சமூக வலைதளத்தில் மிகமோசமாக கருத்து பதிவிட்டு மிரட்டல் விடுத்த நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து, ‘800’ என்ற தமிழ் திரைப்படம் தயாரிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதில், முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட முரளிதரன் தொடர்பான படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது என்று, தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதற்கிடையே, தம்மால் தமிழ்நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. எனவே, இந்த திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிக் கொள்ள வேண்டுமென்று முரளிதரன் அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டார்.
இதை தொடர்ந்து, “நன்றி வணக்கம்” என்ற ஒரே பதில் மூலம், ‘ 800’ திரைப்படத்தில் இருந்து விலகும் முடிவை நடிகர் விஜய் சேதுபதி அறிவித்தார்.
இதற்கிடையே, சமூக வலைதளத்தில் அடையாளம் தெரியாத ஒருநபர், விஜய் சேதுபதியின் மகளை தொடர்பு படுத்தி மிக மோசமாக பதிவிட்டு மிரட்டல் விடுத்திருந்தார். இது பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு, சம்மந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.
இச்சூழலில், விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் தெரிவித்தார்.
—