புதிய மாவட்ட சட்டசபை தொகுதிகள் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் அண்மையில் உருவாக்கப்பட்ட சில மாவட்டங்களில் இடம்பெறும் சட்டசபை தொகுதிகள் குறித்த பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்தாண்டு நெல்லை மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு தென்காசி, விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களின் எல்லைகளை தமிழக அரசு கோட்டம், வருவாய்த்துறை அளவில் பிரிக்கப்பட்டு இருந்தது. எனினும், சட்டசபை தொகுதிகளில் சில, இரண்டு மாவட்ட எல்லைகளிலும் இடம் பெற்றிருந்தது. இது குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

இந்நிலையில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டசபை தொகுதிகளை, தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகள் இடம் பெறுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்; வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கீழவைத்தியனாங்குப்பம் ஆகிய 5 தொகுதிகள்; ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மைலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய 7 தொகுதிகள், புதிதாக உருவான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய 4 தொகுதிகள் அடங்கும்.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளும்; தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 தொகுதிகளும் இடம் பெற்றுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!