தேனி,
ஆளுங்கட்சியினர் தூண்டுதலால் தனது தலித் சாதிச்சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், உத்தரவை வாபஸ் பெறக்கோரியும் தலித் பெண் ஊராட்சி தலைவர் தேனி கலெக்டரிடம் நேற்று மனு அளித்தார். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி, தலித் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது தலைவராக மகேஸ்வரி பழனிச்சாமி உள்ளார். இந்து குறவன் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த 9ம் தேதி தேனி கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி, இவரது தலித் சாதிச்சான்றிதழை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
அதில், மகேஸ்வரி ஜி.கல்லுப்பட்டியில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கான முத்தாலம்மன் கோயிலுக்கு வரி செலுத்துவதாகவும், இவரது குடும்பம் தலித் சமுதாயத்தினருக்கான தனி மயானத்தை விடுத்து, பொதுமயானத்தை பயன்படுத்துவதாகவும் கூறி உள்ளார்.
மேலும், குறவர் சமுதாயத்திற்கான கூடை முடைதல், பன்றி மேய்த்தல் ஆகிய தொழில் முறை பழக்கம் இல்லை. இதனால் சாதிச்சான்றிதழ் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நேற்று தேனி கலெக்டர் அலுவலகம் வந்த மகேஸ்வரி பழனிச்சாமி, கலெக்டர் கிருஷ்ணன் உண்ணியிடம் மனு அளித்தார். அதில், தன்னுடைய சாதிச்சான்றிதழை ரத்து செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து மகேஸ்வரி பழனிச்சாமி கூறியதாவது:நாங்கள் ஜி.கல்லுப்பட்டி ஊராட்சியில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருகிறோம். என் தந்தை மாரிமுத்துவுக்கு பெரியகுளம் வட்டாட்சியரால் இந்து குறவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனது பள்ளி மாற்றுச்சான்றிதழ், கணவரின் ஜாதிச்சான்றிதழிலும் அவ்வாறே உள்ளது.
தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த சின்னத்தாய் முனியாண்டி அதிமுகவில் சேர்ந்தார். அவருக்கு ஆதரவாக ஆளுங்கட்சியினரின் தூண்டுதலால் என்மேல் சாதிய வன்கொடுமை நடத்தப்பட்டுள்ளது. என் சாதிச்சான்றிதழை ரத்து செய்ய கலெக்டர் கொடுத்துள்ள காரணங்களில், குலத்தொழில் செய்யவில்லை.
பொதுக்கோயிலுக்கு வரி செலுத்தினேன். பொதுமயானத்தை பயன்படுத்தியவர் என கூறுவதில் இருந்து என் மேல் தீண்டாமை வன்கொடுமையை ஆணை மூலமாகவே மாவட்ட நிர்வாகம் வெளிப்படுத்தி உள்ளது. எனவே, எனது சாதிச்சான்றிதழை ரத்து உத்தரவை, மாவட்ட நிர்வாகம் வாபஸ்பெற வேண்டும். இல்லையெனில் மாவட்ட நிர்வாகம் மீது நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுப்பேன்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.