அதிமுக கூட்டணிக்கு ராமதாஸ் டாடா? அரசை கண்டித்து பதிவிட்டதால் பரபரப்பு

இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகளை கண்டு கொள்வதில்லை என்று, அதிமுகவை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். அதிமுக கூட்டணியில் விலகும் முடிவால் அரசை விமர்சிக்கத் தொடங்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை அதிமுக -திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தொடங்கிவிட்டன. தற்போது திமுக மற்றும் அதிமுக அணியில் இடம் பெற்றுள்ள சில கட்சிகள், தேர்தல் நேரத்தில் அணி மாறலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

குறிப்பாக, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, வரும் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைப்பது பற்றி யோசித்து வருவதாகவும், அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி தருவதாக திமுக உறுதி அளித்தால் அந்தப்பக்கம் பாமக சென்றுவிடும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இதை உறுதி செய்வது போல், பாமக நிறுவனர் ராமதாஸ் சமீப காலமாக தமிழக அரசையும், மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசையும் விமர்ச்சிக்க தொடங்கி இருக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில், அரசுக்கு எதிராக தொடர்ந்து கண்டன கணைகளை வீசி வரும் ராமதாஸ், தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக விமர்சித்தார்.

இந்நிலையில், அதிமுக அரசுக்கு எதிராக இன்று பகிரங்கமாக ராமதாஸ் கருத்து தெரிவித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதுவும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை… செய்யவும் மறுக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்

அதிமுக அரசை வெளிப்படையாக விமர்சித்திருப்பதால், இனி அக்கூட்டணியில் பாமக இடம் பெறுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது இந்த கருத்துக்கு அதிமுக என்ன ரியாக்‌ஷன் தரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது; திமுகவுடன் பேச்சு நடத்த உதவியாக இருக்கும் என்ற சமிக்கை காட்டவே ராமதாஸ் இவ்வாறு விமர்சித்திருப்பதாக, அரசியல் நோக்கர்கல் தெரிவிக்கின்றனர்.

Translate »
error: Content is protected !!