பிரதமர் மோடி உண்மையில் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில், அக்டோபர் 28ம் தேதி முதல் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையடுத்து தத்தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இதில் நவாடா மாவட்டம் ஹிசுவாவில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கூட்டாக பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பேசுகையில், எல்லையில் சீன ராணுவம் இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றது. அத்துடன் இந்தியாவின் 1200 கிலோ மீட்டர் நிலத்தை கையகப்படுத்தியது. ஆனால், சீனா நமது நிலத்திற்குள் ஊடுருவியபோது, யாரும் இந்திய எல்லைக்குள் வரவில்லை என்று கூறி, பிரதமர் மோடி நமது வீரர்களை அவமதித்துள்ளார்.
பிரதமர் மோடி பேசுவது எல்லாம் பொய்; எங்கு சென்றாலும் பொய் மட்டுமே சொல்கிறார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை ஆதரித்து பேசும் பிரதமர் நரேந்திர மோடி உண்மையில் முதலாளிகளுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டு வருகிறார்.
பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் பல லட்சம் பேர் வேலையிழக்கும் நிலை உருவாகி உள்ளது. பீகார் மாநிலத்திற்கு பாரதிய ஜனதா எதுவும் செய்யாமல் வஞ்சித்துவிட்டது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
—