பொன்னேரி அரசு மருத்துவமனையில் தேவையான படுக்கை வசதிகள் இருந்தும், பணியாளர்கள் பற்றாக்குறையால், கொரோனா தொற்று பாதித்தவர்கள், சென்னை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு அலைக்கழிக்கப்படுகின்றனர்.
பொன்னேரி அரசு மருத்துவமனையில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்காக கட்டப்பட்ட கட்டடத்தில், கடந்த, 27ம் தேதி முதல், கொரோனா சிகிச்சை செயல்படுகிறது. இங்கு, அமைக்கப்பட்டிருந்த, 30 படுக்கைகளும் தொற்று பாதிப்பு அதிகரிப்பால், ஒரே நாளில் நிரம்பின. மருத்துவமனையில், மேலும், 120 படுக்கை வசதிகள் உள்ளன.
அதில், 20 படுக்கைகள் டயாலிஸ் நோயாளிகளுக்கு ஒதுக்கினாலும், 100 படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்.அது மட்டுமின்றி, பூட்டிக் கிடக்கும் சிறப்பு தங்கும் விடுதி, கண் சிகிச்சை பிரிவு வளாகங்களிலும் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தலாம்.உள்நோயாளிகள் அனுமதியில்லாத நிலையில், அந்த படுக்கைகளும் காலியாகவே உள்ளன.
கொரோனா சிகிச்சை மையத்திற்கு தேவையான கூடுதல் படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகள், பொன்னேரி அரசு மருத்துவமனையில் இருந்தும், தொற்று பாதிப்பவர்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.தேவையான ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள், உதவியாளர்கள் பற்றாக்குறை உள்ளது.புதிதாக பொறுபேற்க உள்ள அரசு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் உடனடியாக தேவையான பணியாளர்களை நியமித்து, மேற்கண்ட படுக்கை வசதிகளை தொற்று பாதித்தவர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.