இந்தியாவுக்கு சவுதி தந்த “தீபாவளி பரிசு”! பாக். வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நீக்கம்

பாகிஸ்தான் வரைபடத்தில் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரை நீக்கி, இந்தியாவுக்கு தீபாவளி பரிசை சவுதி அரேபியா தந்துள்ளது. இது, பாகிஸ்தானுக்கு பெரும் மூக்குடைப்பாக கருதப்படுகிறது.

அண்டை நாடான பாகிஸ்தான், உலக அரங்கில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை அவ்வப்போது எழுப்பி வருவதும், அதன் முயற்சிகள் தோல்வி அடைவதும் வாடிக்கை. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் பாகிஸ்தானின் பாச்சா எடுபடுவதில்லை.

இந்த நிலையில், பாகிஸ்தான் ஆதரவு என்ற வட்டத்தில் இருந்து சவுதி அரேபியாவை இந்தியா சத்தமே இல்லாமல் தன் பக்கம் கொண்டு வந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் நிகழ்வாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை, பாகிஸ்தானின் வரைபடத்தில் இருந்து சவுதி அரேபியா நீக்கியுள்ளது. இதை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சமூக ஆர்வலரான அம்ஜத் அயூப் மிர்சா என்பவர் தனது சமூக வலைதளப்பதிவின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

அந்த பதிவில், “ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை பாகிஸ்தானின் வரைபடத்தில் இருந்து சவுதி அரேபியா நீக்கியுள்ளது” என்று ட்வீட் செய்துள்ளார். அத்துடன், “இந்தியாவுக்கு சவுதி அரேபியாவின் தீபாவளி பரிசு இது” என்று குறிப்பிட்டு, ஒரு படத்தையும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

நவம்பர் 21-22 தேதிகளில் ஜி -20 உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்து வரும் சவுதி அரேபியா, 20 ரியால் பணத்தாள் ஒன்றை வெளியிட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதில் காட்டப்பட்டுள்ள உலக வரைபடம் கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகியவற்றை பாகிஸ்தானின் பகுதிகளாகக் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, சவுதி அரேபியாவின் நடவடிக்கை பாகிஸ்தானை அவமதிக்கும் செயலுக்கு ஒப்பானது என்று பாகிஸ்தான் ஊடகங்கள் சில குறைகூறியுள்ளன. இதேபோல், வேறுசில இஸ்லாமிய நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக திரும்பி, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி தரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!