சென்னை,
சென்னையில் கடந்த ஆண்டு முழு ஊரடங்கை விட இந்த ஆண்டு முழு ஊரடங்கின் போது இரண்டு மடங்கு வாகன விபத்து மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கொடிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதின் முதல் ஆயுதமான ஊரடங்கு நடைமுறைகளை கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஏப்ரல், மே மாதம் தளர்வுகளின்றி முழு ஊரடங்கானது கடைப்பிடிக்கப்பட்டது.
இதனால் பேருந்து, விமானம் மற்றும் ரயில் சேவைகள் தடை செய்யப்பட்டன. அத்தியாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் ஒருவரும் வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை விடப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருவோர் இ–பதிவு மூலமாக மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. மீறி செல்வோர் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் சென்னையில் கடந்த ஆண்டு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 283 வாகன விபத்துகள் நடந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கிய விபத்தில் சிக்கி 62 பேர் படுகாயமடைந்தாகவும், 245 பேர் காயமடைந்ததாகவும், 63 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் இந்த ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் முழு ஊரடங்கின் போது 635 வாகன விபத்துகள் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளன. இதில் 135 பேர் அஜாக்கிரதை யாக வாகனத்தை இயக்கிய விபத்தில் சிக்கியதாகவும், 135 பேர் விபத்தில் படு காயமடைந்ததாகவும், 136 பேர் இறந்ததாகவும் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு முழு ஊரடங்கின் போது வாகன விபத்து மரணங்கள் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு முழு ஊரடங்கு முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றமும் எதிர்க்கட்சிகளும் தங்களது கண்டத்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் மட்டும் 1,209 வாகன விபத்துகளில் 233 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.