தமிழகத்தில் வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. தொடக்க நாளிலேயே சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதேபோல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வரும் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை ள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
கடலோரம் மற்றும் அதையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தற்போதைய மழை பெய்வதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.