வங்கிகள் தங்களது சேவை கட்டணங்கள் திடீரென உயர்த்தியதாக செய்திகள் பரவிய நிலையில், மத்திய நிதி அமைச்சகம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள், வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தினாலும், பணம் எடுத்தாலும் கட்டணம் விதிப்பதாக, தகவல் பரவியது. இது, பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இச்சூழலில், இந்த தகவல் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா காலத்தில் உள்ள சூழலை கருத்தில் கொண்டு வங்கிக் கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் எதுவும் கிடையாது. ஏழைகளுக்கான 41.13 கோடி ஜன் தன் கணக்குகள் உள்ளிட்ட 60.04 கோடி அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரைத்த இலவச சேவைகளுக்கு எந்த விதமான சேவை கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.
வழக்கமான சேமிப்பு கணக்குகள், நடப்பு கணக்குகள், பணக் கடன் கணக்குகள் மற்றும் மிகைப்பற்று கணக்குகள் தொடர்பான கட்டணங்கள் உயர்த்தப்படாத போதும், ஒரு மாதத்தில் செய்யக்கூடிய இலவச பண செலுத்துதல் மற்றும் திரும்பப் பெறுதல்களின் எண்ணிக்கை தொடர்பான சில மாறுதல்களை, 2020 நவம்பர் 1 முதல் பேங்க் ஆஃப் பரோடா செய்தது.
இவை ஒரு மாதத்துக்கு ஐந்து முறை என்பதில் இருந்து மூன்று முறையாக குறைக்கப்பட்டன. எனினும், இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகான பரிவர்த்தனைகளுக்கானக் கட்டணங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. வேறு எந்த பொதுத்துறை வங்கியும் இக்கட்டணத்தை உயர்த்தவில்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.