தமிழக ஆளுநர் பன்வாரிலால், திடீரென இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு பிரதமர் உள்ளிட்டோரை அவர் சந்தித்திருப்பது, தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித், திடீரென இன்று காலை தலைநகர் டெல்லிக்கு இன்று காலை புறப்பட்டு சென்றார். தனது 3 நாட்கள் பயணத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமீத் ஷா உள்ளிட்டோரை சந்தித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தவுள்ளார்.
தனது பயணத்தின் முதல் நிகழ்வாக, இன்று மாலை பிரதமர் மோடியை ஆளுநர் புரோகித் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் அரசியல் சூழல் கொரோனா மற்றும் சட்டம் ஒழுங்கு விவகாரம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
அத்துடன், அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்கியது போன்றவை குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும், ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பான அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஆளுநர் இன்னமும் ஒப்புதல் தரவில்லை.
இந்த விவகாரத்தில் ஆளுநர் மீது உச்ச நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்திருக்கும் சூழலில், அந்த விவகாரம் பற்றியும் மத்திய அரசின் கருத்தை ஆளுநர் நாடியிருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
அடுத்தாண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் முனைப்பு காட்டி வருகின்றன. இந்த நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.