தமிழகத்தில் வரும் 16ம் தேதியில் இருந்து, 9 முதல் 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதுதொடர்பாக பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
கொரோனா தொற்று பரவலால், கடந்த 8 மாதங்களாக தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில், வரும் 16ம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
ஆனால், மழை காலமாக இருப்பதாலும், டெங்கு பரவும் அபாயம் உள்ளிட்டவற்றாலும், கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படாததாலும், பள்ளிகள் திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆந்திராவில், பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 57 ஆசிரியர்கள், 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவல், பெற்றோர் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.
இதையடுத்து பள்ளிகளை திறப்பதா, வேண்டாமா என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதன் முடிவில், பள்ளிகளை திறப்பது தொடர்பாக வரும் 9ம் தேதி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளிகள் திறப்பது குறித்து, மத்திய அரசு அக்.30ம் தேதி வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, நவ.15 ஆம் தேதிக்குப் பின்னர் சூழ்நிலைக்கு ஏற்ப, பள்ளிகளை மாநில அரசுகள் படிப்படியாக திறக்க அனுமதியளித்தது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறை, தொற்று நோய் சிறப்பு வல்லுநர் குழுவுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, வரும் நவ.16 ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகளை திறக்கலாம் என அரசால் அறிவிக்கப்பட்டது.
எனினும், பத்திரிகைகள், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வாயிலாக பள்ளிகள் திறப்பு குறித்து சில கருத்துகள் வெளியிடப்பட்டு வருகிறது. இது குறித்து ஏற்கனவே பெற்றோர், கல்வியாளர்களின் கருத்துகள் அரசால் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், வரும் நவம்பர் 9 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் கோவிட் 19 முன்னெச்சரிகை குறித்து அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கருத்து கேட்பு கூட்டம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமையில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இக்கருத்து கேட்பு கூட்டங்களில் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். கலந்து கொள்ள இயலாதவர்கள் கடிதம் மூலமாக தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம். இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளை திறப்பு குறித்து அரசால் முடிவு எடுக்கப்படும் என்று, அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.