ஆதரவை பெறுவது தொடர்பாக ரஜினியுடன் பேசுவேன்; வரும் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று, மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை தி.நகரிலுள்ள ஜிஆர்டி ஹோட்டலில், மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இக்கூட்டத்தின் நிறைவில், சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் செய்தியாளர்களை இன்று கமல்ஹாசன் சந்தித்தார்.
செய்தியாளர்களுக்கு கமல் அளித்த பேட்டியில் கூறியதாவது: அரசியல் பற்றி ரஜினியும் நானும் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். அவரது நிலைப்பாடு முன்னரே எனக்குத் தெரியும். ரஜினிகாந்த் உடல்நிலையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு நண்பராக எனது விருப்பம்.
நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். ஆனால், இவையிரண்டில் உடல்நலம் என்பது முக்கியம். ஆகவே, முடிவெடுக்க வேண்டியது அவர்தான். சட்டமன்றத் தேர்தலில் ரஜினியின் ஆதரவைக் கேட்போம்.
தமிழகத்தில் மக்கள் நீதிமய்யம் தான் மூன்றாவது பெரிய கட்சி. எனவே, மூன்றாவது அணி ஏற்கனவே அமைந்துவிட்டது. எங்களது கூட்டணி நல்லவர்களின் கூட்டணியாக இருக்கும். அனைத்து கட்சிகளிலும் உள்ள நல்லவர்கள், இங்கே வரவேண்டும்.
எந்தக் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும் என்பதை அவசரமாக இப்போதே தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. நேர்மையை முன்னிறுத்தி நாங்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். அதேபோல, தாங்கள் நேர்மையானவர்கள் என பிற கட்சியினரால் கூற முடியுமா?
வரும் சட்டசபை தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்.மக்கள் நீதி மய்யத்தின் குரல் சட்டசபையில் ஒலிக்கும். மனு ஸ்மிருதி என்பது புழக்கத்தில் இல்லாத ஒரு புத்தகம் என்பதால் அதைப்பற்றி பேச வேண்டிய அவசியமில்லை.
முருகனின் வேலை யார் வேண்டுமானாலும் கையிலெடுக்கலாம். ஆனால், இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதுதான் என்னுடைய வேலை. வேல் யாத்திரையை அரசு ரத்து செய்தால் நல்லது. சகாயம் போன்ற நல்லவர்களை எப்போதும் மக்கள் நீதி மய்யம் கட்சி வரவேற்கும் என்று கமல்ஹாசன் கூறினார்.