பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை தொடங்க உத்தேசித்துள்ள வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி தராது என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இதை மீறினால் பாஜக மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அதன் தலைவர் முருகன் அறிவித்தார். அதன்படி நாளை (நவ. 6ம் தேதி) திருத்தணியில் தொடங்கி, டிசம்பர் 6ம் தேதி திருச்செந்தூரில் வேல் யாத்திரையை முடிக்க, அவர் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே, பாஜகவின் வேல் யாத்திரையால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடும், வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று, அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
அதே நேரத்தில், வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கொரோனா பரவல் காரணமாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை கருதியும் பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி தரக்கூடாது என்று மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கை, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரித்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கொரோனா பரவல் கருதி, வேல் யாத்திரைக்கு அனுமதி தருவதில்லை என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அனுமதி மறுப்புக்கான உத்தரவு, பாஜக அலுவலகத்தில் வழங்கப்படும் என்றார்.
பாஜக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசே கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. எனவே, யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், கொரோனா 2ஆம் பரவக்கூடும் என்பதால், வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை என்றார். தமிழக அரசின் வாதத்தை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, வேல் யாத்திரைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை முடித்து வைத்தது.
இதற்கிடையே, இந்த விவகாரம் பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், வேல் யாத்திரையால் கொரோனா அதிகமாக பரவும் என்பதாலே அரசு அனுமதிக்கவில்லை. சட்டத்தை மீறினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.