‘‘எனது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளியுங்கள்’’ – ‘ஜெ தீபா’ கமிஷனரிடம் புகார்

தனக்கு கொலை மிரட்டல் வருவதால் தனது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு தரும்படி ஜெ தீபா சென்னை போலீஸ் கமிஷனருக்கு வாட்ஸ்அப்பில் புகார் அனுப்பியுள்ளார்.

தமிழக அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் ஜெ. தீபா. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் கட்சி தொடங்கிய இவர் பின்பு கட்சியை அதிமுகவுடன் இணைப்பதாகவும் அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் கடந்த ஆண்டு ஜுலை மாதம் அறிவித்தார். கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக சப்தமில்லாமல் இருந்த அவர் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் பாதுகாப்பு அளிக்கும் படியும் போலீஸ் கமிஷனருக்கு வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் மூலம் புகார் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘‘நான் கட்சி நடத்தி வந்த போது அரசியல் அனுபவம் இல்லாத காரணத்தால் பல சூழ்நிலைகளில் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. யார் ஏவுகிறார்கள் என குழம்பிய நிலையில் நான் கட்சியை கலைத்து விட்டேன். எனது கட்சியில் இருந்த நபரான ஈசிஆர் ராமச்சந்தரன் என்பவர் ராஜா என்பவருடன் சேர்ந்து கொண்டு எனக்கு அடிக்கடி தொலைபேசியில் பேசி மிரட்டல் விடுக்கிறார். குண்டர்களை அழைத்து வந்து என் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்று வருகின்றனர்.

நான் அரசியலை விட்டு விலகிய பின்னும் இருவரும் என்னை பின்தொடர்கிறார்கள். பல முறை அவர்களது மிரட்டலை கண்டு நான் அச்சமடைந்துள்ளேன். தற்போது எனது உடல் நிலை மோசமாக உள்ளது. விபத்து காரணமாக கால்கள் செயலிழந்த நிலையில் நான் கடந்த 2 மாதங்களாக தீவிர சிகிச்சையில் உள்ளேன். இந்த நிலையிலும் ராஜாவும், ராமச்சந்திரனும் தொலைபேசியில் மாற்றி மாற்றி அழைத்துப் பேசி எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். என்னால் நேரில் வந்து புகார் அளிக்க முடியாததால் சென்னை நகர காவல்துறை ஆணையர் அவர்களுக்கு இந்த வாய்ஸ் மெசேஜ் மூலம் இந்த புகாரை அளிக்கிறேன். எனது வக்கீல் மூலம் இந்த புகார் காவல் நிலையத்தை விரைவில் வந்தடையும். ராஜா மற்றும் ஈசிஆர் ராமச்சந்திரன் இருவரால் எனக்கும், எனது கணவர் மாதவன் உயிருக்கும். காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!