சென்னை உயர் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு

கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் மாநிலம் முழுதும் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதை பின்பற்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டு, சுமார் 20 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தில் அனைத்து  வழக்குகளும் காணொலிக் காட்சி மூலமாக நடத்தப்பட்டு வந்தன.

நீதிபதிகள் முன்பு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மட்டுமே நேரில் ஆஜராகி வழக்குகளை நடத்திவந்த நிலையில், கொரொனா சிகிச்சைக்கான ஆக்சிஜன், படுக்கை வசதி வழக்குகள், சட்டமன்ற தேர்தல் தொடர்பான வழக்குகள், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகள் உள்ளிட்ட முக்கிய வழக்குகளும் காணொலிக் காட்சி மூலமாக நடத்தப்பட்டன.

இந்த நிலையில் காணொலியில் ஆஜராவது சிரமமாக உள்ளது என வழக்கறிஞர் சங்கங்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகளையும், கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதையும் கருத்தில் கொண்ட உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் கடந்த வெள்ளிக்கிழமையன்று  கட்டுப்பாடுகளை தளர்த்தி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்படி இன்று முதல்  சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தபட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், அவர்களின் உதவியாளர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள அதேநேரம், வழக்கறிஞர் சங்கங்கள், அலுவலக அறைகள், நூலகங்கள் ஆகியவற்றையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!