சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்,
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா – வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறினார்.
நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும்,
வரும் 18ம் தேதி திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கும் ஓரிரு இடங்களிலும் அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் எனவும், மேலும் 18 ம் தேதி சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அளவு மாறாமல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளை வரும் 18ஆம் தேதி நெருங்கும் என அவர் தெரிவித்தார். முன்னர் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1முதல் தற்போதுவரை இயல்பாக கிடைத்திருக்கும் அளவு 29 சதவிகிதம். ஆனால் தற்போது 44 சதவிகிதம் அளவு மழைப் பொழிவு கிடைத்துள்ளது. இது இயல்பை விட 54 சதவிகிதம் அதிகம் எனவும், சென்னையை பொருத்தவரை அக்டோபர் 1முதல் தற்போது வரை 49 சதவிகிதம் மழைப் பொழிவு இருக்க வேண்டும் ஆனால் தற்போது வரை 82 சதவிகிதம் கிடைத்துள்ளது. இது இயல்பான அளவை விட 67 சதவிகிதம் அதிகம் எனவும் கூறினார்.