தேனி மாவட்டம் இராயப்பன்பட்டி அருகே 52.5 அடி உயரம் கொண்ட சண்முகா நதி நீர்த் தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக ஹைவேவிஸ் மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளது. மேகமலை மற்றும் ஹைவேவிஸ் பகுதியில் பெய்த தொடர் மழையால், சண்முகா நதியின் நீர்பிடிப்புப் பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, கடந்த நவம்பர் 3ஆம் தேதி அணையின் முழுக்கொள்ளளவான 52.5 அடியை எட்டியிருந்தது. இதனை அடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறக்க அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கை ஏற்று தமிழ்நாடு அரசு இன்று முதல் அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் அணையில் இருந்து சண்முகா நதி கால்வாய் பகுதியில் தண்ணீர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், பொதுப்பணி, வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் 1640 ஏக்கர் நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு 14.47 கனஅடி வீதம், 50 நாட்களுக்கு தண்ணீர் இருப்பை பொறுத்து நீர் திறக்கப்படும் எனவும், இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 52.50 அடியாகவும், நீர் இருப்பு 79.57 மில்லி கன அடியாகவும் உள்ள நிலையில், நீர்வரத்து 16கன அடியாகவும் உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இ தன் மூலம் ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், எரசக்கநாயக்கனூர், ஆனைமலையன்பட்டி, கன்னிசேர்வைப்பட்டி, அழகாபுரி, உள்ளிட்ட பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன.