சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை இன்று காலை 104 அடியை தாண்டியதால், வருகின்ற உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகின்றது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருப்பதால், அணையில் இருந்து உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடி, தற்போதுள்ள நீர்மட்டம் 104.24 அடி மற்றும் 32.16 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து 10812 கன அடியாக உள்ள நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் 1800 கன அடியும் பவானி ஆற்றில் 9000 கன அடி என மொத்தம் 10800 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சற்று முன்னர் பவானிசாகர், சத்தியமங்கலம், தொட்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் பேரூராட்சியின் சார்பில், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும், துணி துவைக்கவோ, குளிக்கவோ யாரும் பவானி ஆற்றுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.