சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் புவியரசன்,
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ளது எனவும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்க கூடும் இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை , திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும், திருச்சிராப்பள்ளி, கரூர் திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள்மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் குந்தலம் 20 செ.மீ தாராபுரம் (திருப்பூர்) 13 செ.மீ மழை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது எனவும், மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தமட்டில் தென்மேற்கு வங்க கடல், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இன்று இப்பகுதிகளுக்கும், நாளை தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.காற்றழுத்த தாழ்வின் மத்தியில் இருந்த அழுத்தம் காரணத்தால் விரைந்து வலுபெற்றது, கரை பகுதியை நெருங்கியதால் மேலும் புயலாக வலுப்பெறாது எனவும், சென்னையில் தொடரும் மழை நாளை பிற்பகல் வரை தொடரும் பிற்பகலுக்க்கு பின் மழை குறையும் எனவும் கூறினார்.