தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக இன்னும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், இந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பதற்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஏதுவாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதற்கு முன்பாகவே பிளஸ் 2 தேர்வுகள் நடந்துவிட்ட நிலையில், கடந்த கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது.
நடப்பு கல்வியாண்டில் வழக்கமாக ஜுன் மாதத்தில் திறக்கப்பட வேண்டிய கல்வி நிறுவனங்கள், இன்னமும் மூடப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் மாத இறுதி வரை பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை என்றே தெரிகிறது. மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எனினும், நேரடி வகுப்புகளை போல் ஆன்லைன் வகுப்புகள் இல்லை; ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்கள் மாணவர்களுக்கு புரியவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. மேலும், அடுத்த 2, 3 மாதங்களில் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்; அதற்கு முன்பாக மாணவர்கள் தயாராவது சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டைய கூறுகையில், பொதுத்தேர்வுகளை மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடத்துவதற்குப் பதிலாக ஓரிரு மாதங்கள் தள்ளிப் போடுவதா? அல்லது ரத்து செய்வதா? என்பது பற்றி டிசம்பர் இறுதிக்குள் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.