மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பல லட்சங்கள் மோசடி செய்த கிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை அடுத்த அகரகீரங்குடி ஊராட்சியில் உள்ள முட்டம் கிராமத்தில் கடந்த 2020-ம் ஆண்டு சுமார் 450 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனர். அந்த பயிர்களுக்கு, கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்கு என்பவரிடம் சிட்டா அடங்கல் சமர்ப்பித்து பயிர்க் காப்பீட்டினையும் செய்திருந்தனர். அந்த பருவத்தில் பெய்த கனமழையின் காரணமாக சம்பா பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு 22 ஆயிரம் ரூபாயை காப்பீட்டு நிறுவனம் அறிவித்தது. இந்த தொகையானது 4-இல் ஒருபங்கு விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை. இதையடுத்து, விவசாயிகள் உழவன் செயலியை பயன்படுத்தி பார்த்ததில், அந்த காப்பீட்டுத் தொகை முழுவதும் கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்குவின் மனைவி, மகள் மற்றும் உறவினர்களுக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, திருமலைசங்கு காப்பீடு மூலம் மட்டுமே 22 லட்ச ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் அளித்ததையடுத்து, கோட்டாட்சியர் பாலாஜி ஆவணங்களை சரிபார்த்ததில் திருமலை சங்கு போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.