நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு – அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரிதிநிதிகள் பங்கேற்க அழைப்பு
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமெடுத்துள்ளன. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகள் 150 நகராட்சிகளில் 17 மாநகராட்சிகள், 110 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகள், மாநகராட்சிகளில் வார்டுகளின் எண்ணிக்கையை நிர்ணயித்து அவற்றின் எல்லைகளை வரையறை செய்வது தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், டிசம்பர் 9ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், அந்தந்த மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நாளை இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளனர். பட்டியல் வெளியீடு நிகழ்வில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டாலும், புதிதாக பட்டியலில் பெயர் சேர்க்கவோ அல்லது திருத்தம் மேற்கொள்ளவும் கால அவகாசம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.