வைகை அணையில் இருந்து 58ம் கால்வாயில் 80 நாட்களுக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை கடந்த ஆண்டு 3 முறை முழுக்கொள்ளளவை எட்டியது. கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரையில் வைகை அணை நீர்மட்டம் நிரம்பிய நிலையிலேயே உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையிலும், போதுமான நீர்இருப்பு இருந்ததால் அணை நீர்மட்டம் குறையவே இல்லை. இந்நிலையில் வைகைஅணையில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள 33 கண்மாய்களில் நீரை நிரப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 58ம் கால்வாயில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வினாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணை நீர்மட்டம் 67 அடிக்கும் மேல் இருந்தால் மட்டுமே 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும். கடந்த 3 மாதத்திற்கும் மேலாக வைகை அணை நீர்மட்டம் சராசரியாக 70 அடியாக இருக்கும் காரணத்தால், 58ம் கால்வாயில் 80 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 80 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் திறக்கப்பட்டதால் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்களில் 70 சதவீதம் வரை தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. இதனால் உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு வைகை அணையில் இருந்து 33 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது…