ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி வழங்கப்பட்ட 9-வது கொரோனா தடுப்பூசி இதுவாகும். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டேவியா, கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் யுத்தம் மேலும் வலுவடைந்துள்ளதாக தெரிவித்தார்.
பல்வேறு ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு ஸ்புட்னிக் லைட்டுக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்குவதற்கான இந்தியாவின் மத்திய மருந்து ஆணையத்தின் நிபுணர் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஒரு டோஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மொத்தம் 29 நாடுகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.